கறுப்பு எம்.ஜி.ஆர்: எழுச்சியும் வீழ்ச்சியும்

நாற்காலிக்கனவுகள்
விஜயகாந்த்
விஜயகாந்த்
Published on

எழுச்சிக் கலைஞர் என்று விஜயகாந்துக்குப் பெயர் வைத்தவர் கலைஞர். அப்போது அவரது வசனத்தில் உருவான படங்களில் விஜயகாந்த் நடித்துக்கொண்டிருந்தார். அதன் பின்னர் 1991&ல் கேப்டன் பிரபாகரன் வெளிவந்த பின்னர் அவர் எல்லோருக்கும் கேப்டன் ஆனார். அதன் பின்னர் அவரது பொதுவான செல்வாக்கு விர்ரென உயர்ந்தது. தென்னிந்திய திரைப்பட சங்கத் தலைவராக ஆகி, நடிகர் சங்க கடனைத் தீர்த்தது அவருக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது. செல்வாக்கு மிகுந்த எல்லா நடிகர்களுக்கும் வரும் அரசியல் ஆசை அவருக்கு வர, 2000 வது ஆண்டின் முற்பாதியில் அரசியல் சார்பான கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்தார். எப்போது அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற கேள்வி வலுக்க ஆரம்பித்தது. ஜோதிடர்கள், கோயில்கள் என்று அவரும் ஒரு சுற்று வந்துகொண்டிருந்தார். கடைசியில் 2005 செப்டம்பரில் மதுரையில் மிகப்பெரிய மாநாடு கூட்டி கட்சியை அறிவித்தே விட்டார். தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று தமிழ்நாட்டில் அதுவரை இருந்த எல்லா கட்சிகளின் பெயரையும் கலந்து ஒரு பெயரை அறிவித்திருந்தார். பிற கட்சிகளுக்கு தன்னை மாற்று என்று முன்வைத்த அவர் மக்களுடனும் கடவுளுடனும் தான் கூட்டணி என்றார். அடுத்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 8.38 சதவீத வாக்குகளைப் பெற்று விஜயகாந்த்துக்கு இருக்கும் செல்வாக்கை நிரூபித்தது. அந்த தேர்தலில் விஜயகாந்த் மட்டுமே ஜெயிக்க முடிந்தது. அவர் பா.ம.க.வுடன் சில ஆண்டுகளாகவே உரசல் போக்கைக் கொண்டிருந்தார். பா.ம.க.வின் கோட்டையான விருத்தாசலத்தில் அவர் போய் நின்றபோது அது ஒரு மிகச்சிறந்த சவாலாகவும் அதே சமயம் தற்கொலை முயற்சியாகவும் பார்க்கப்பட்டது. ஆனால் சவாலில் விஜயகாந்த் வென்று சட்டமன்றத்தில் நுழைந்தார்.

 ஆரம்ப காலகட்டத்தில் கட்சியில் தன்னுடன் பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற சீனியர்களையும் மாபா பாண்டியராஜன் போன்ற அறிவாளிகளையும் அவர் வைத்திருந்தார். படித்த இளைஞர்களையும் புதிய வாக்காளர்களையும் அவரால் கவரவும் முடிந்தது. அவருக்கென்று மகளிர் வாக்குகளும் கணிசமாக இருந்தன. பெரும்பாலும் அவரது கட்சியால் அ.தி.மு.க.வின் பாரம்பரிய வாக்குகள் பாதிப்படைந்தன என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில் 2009 நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அதிலும் தனித்தே போட்டியிட்டார். 10.06 சதவீத வாக்குகள் கிடைத்தன. விஜயகாந்த் தன்னை வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் தவிர்க்கமுடியாத சக்தியாக நிரூபித்தார்.

ஆக, 2011 சட்டமன்றத் தேர்தல் வந்தது. தி.மு.க.வைத் தோற்கடிக்க அ.தி.மு.க, தே.மு.தி.க.வை தன் பக்கம் இழுத்தது. பண்ருட்டியார், தன் மைத்துனர் சுதீஷ் ஆகியோருடன்  சென்று விஜயகாந்த் ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணியை முடிவு செய்தார். 41 இடங்கள் அவருக்குக் கூட்டணியில் வழங்கப்பட்டன. இடதுசாரிகளும் அடங்கிய இக்கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதி என்று முடிவு செய்வதில் பெரும் குழப்பம் ஏற்பட்டாலும் கடைசியில் தே.மு.தி.க 29 இடங்களில் வென்று பிரதான எதிர்க்கட்சி ஆனது. தி.மு.க.வால் எதிர்க்கட்சி அந்தஸ்து கூடப் பெறமுடியவில்லை. தன் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியை இடிக்கச் செய்த தி.மு.க.வைப் பழிவாங்கிவிட்டதாக அவர் நினைத்திருக்கலாம்!

இதுவரைக்கும் அவர் செய்தவை சரியாகவே இருந்தன. வெற்றிக்குப் பின்னர் உடனே தே.மு.தி.க, அ.தி.மு.க.வுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தது! அப்புறம் கேட்கவா வேண்டும்? சட்டமன்றத்தில் நாக்கைக் கடித்து விஜயகாந்த் பேசியது பெரும் அமளியானது. அவர் குடித்துவிட்டு சட்டமன்றத்துக்கு வருவதாக முதல்வர் ஜெயலலிதாவே பேசினார். விஜயகாந்த் மட்டும் இந்த காலகட்டத்தில் பொறுமையாக காய்கள் நகர்த்தி இருந்தால் தே.மு.தி.க இன்று மிகப்பெரிய சக்தியாக இருந்திருக்கக்கூடும். ஆனால் நெல்லிக்காய் மூட்டை போல அவருடன் இருந்த முக்கியமான ஆட்கள் அனைவரும் சிதறிவிட்டனர். 2012&ல் தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் எட்டுபேர் தனி அணியாகச் செயல்பட ஆரம்பித்து முதல்வரைச் சந்தித்தனர். அவர்கள் அ.தி.மு.க ஆதரவாகவே செயல்படவும் செய்தனர். மூத்த தலைவரான பண்ருட்டியாரும் கூடாரத்தைக் காலி செய்துவிட்டு எம்.எல்.ஏ பதவியை விட்டு விலகி 2013&ல் அ.தி.மு.க.வுக்குப் போய்விட்டார்.

2014 - ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க பாஜக மற்றும் ம.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்தது. எந்த இடத்திலும் வெல்ல முடியவில்லை. பிரச்சாரத்துக்கு வந்திருந்த மோடி, என் நண்பர் விஜயகாந்த் என்று குறிப்பிட்டுப் பேசி இருந்தார். அவரது பதவி ஏற்பு விழாவுக்கு டெல்லி சென்றிருந்த விஜயகாந்த், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவருக்கு கண்ணில் தொடர்ந்து நீர் வடியும் பிரச்னை தலை தூக்கி இருந்தது. டெல்லியில் அவரை ஒரு நிருபர் ஏடாகூடமாக கேள்வி கேட்க, ‘ தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க..'' என்று அவர் சீறினார். 2014 தேர்தல் சமூக ஊடகங்கள் முக்கியப் பங்கு வகித்த தேர்தல். இணையத் தொடர்பு அதிகமான காலகட்டம். இணைய வாசிகளுக்கு யாரும் முக்கியமில்லை! வெள்ளந்தியாக விஜயகாந்த் நடந்துகொள்வது, மேடைகளில் திட்டுவது போன்றவற்றை முன்பு டி.வி.கள்தான் காட்டிக்கொண்டிருந்தன. ஆனால் சமூக ஊடகங்களின் வளர்ச் சிக்குப்பின் அவர்களுக்கு சிக்கியவர் விஜயகாந்த். அவரளவுக்கு உடல்மொழியை வைத்துக் கிண்டல் செய்யப்பட்டவர்கள் யாரும் இல்லை.! இணைய தலைமுறையால் முதல் களப்பலியாக்கப்பட்டார் கேப்டன்! பழைய கம்பீரமான விஜயகாந்தாக இருந்தால் இதையெல்லாம் அவர் சமாளித்திருக்கலாம். தேர்தலில் தோல்வி, கட்சிக்குள் கலகம், இவற்றுடன் அவரது உடல்நலக்குறைவும் சேர்ந்து கொள்ள அவரது சரிவு மிகவேகமாகத் தொடங்கிவிட்டது.

2016 தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கச் சொல்லி பலரும் சொல்லிப்பார்த்தார்கள். அவரோ மூன்றாவது அணியான மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி சேர்ந்தார். உடனே அவரது இரு எம்.எல்.ஏக்கள் விலகி தி.மு.க.வில் சேர்ந்தனர். பத்து மாவட்டச் செயலாளர்கள் விலகினர். மக்கள் நலக்கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை! சிங்கத்தின் குகைக்குள் சென்று வென்றவரான விஜயகாந்த், தான் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியிலேயே தோற்றுப்போனார்! மூன்றாவது இடம்பெற்ற அவர் டெபாசிட்டைப் பறிகொடுத்தார்!

கட்சி தொடங்கி கொஞ்ச நாள் ஆகி, பின்னர்தான் குடும்ப உறுப்பினர்களை நுழைப்பது அரசியல் கட்சித் தலைவர்களின் வழக்கம். ஆனால் விஜயகாந்த் வரும்போதே தன் மைத்துனர் சுதீஷ், மனைவி பிரேமலதாவுடன் தான் வந்தார்! தமிழ்நாட்டில் சித்தாந்த பின்புலத்தின் மீது கவனம் செலுத்தாமலோ, தொலைநோக்கு திட்டம் என்று எதையும் முன் வைக்காமலோ உருவான கட்சி தே.மு.தி.க. தன்னை கருப்பு எம்ஜிஆர் என்று அவர் உருவகப்படுத்திக்கொண்டார்! அவர் தனித்த, நீண்ட போராட்டத்துக்கும் பயணத்துக்கும் தயாராக இருந்திருக்க வேண்டும்! எப்போதும் கூட்டணி கிடையாது என்றே சொல்லி வந்த அவர் மூன்றாவது தேர்தலிலேயே கூட்டணி என அ.தி.மு.க.வுடன் கரம் கோர்த்ததில் இருந்து அவரது சரிவு தொடங்கிவிட்டது எனலாம்!

ஏப்ரல், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com